Tuesday, November 23, 2010

அரசுப்பள்ளிகளும்-பராமரிப்பும்..

அரசு/ நகராட்சிப்பள்ளிகளைப்பராமரிக்க


சில ஆலோசனைகள்.......

அரசுப்பள்ளிகளும் பராமரிப்பும்..

தமிழக அரசின் சார்பாக நடத்தப்படும் அரசு பொதுமருத்துவமனைகள்,அரசு போக்குவரத்து பேருந்துகள், அரசு, நகராட்சி,ஊராட்சிப்பள்ளிகள் போன்றவற்றிற்கு பொதுவான குறைபாடாக மக்களாலும்,ஊடகங்களாலும் சொல்லப்படுவது ஒன்றே ஒன்றுதான்! அது போதிய பராமரிப்பின்றி ,சுத்தமின்றி காணப்படுவதுதான்.

அரசுப்பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகள் கட்டப்படும்போது நன்றாகத்தான் இருக்கிறது.மாணவர்களின் வசதிக்காக வாங்கப்படும் இருக்கை வசதிகள்,அலமாரிகள்,கணிப்பொறிகள் போன்றவைகள் மட்டுமல்ல, வகுப்பறைக்கட்டங்கள் உட்படபோதியபராமரிப்பின்றியும்,முரட்டுத்தனமானகக்கையாளுவது போன்றவைகளால் விரைவில் சிதிலமடைந்து விடுகிறது.பெரும்பான்மையான பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு தான் ஓய்வு பெறும்போது, எந்தவிதமான புகாரின்றி,தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட. தன்னால் வாங்கப்பட்ட அனைத்துப்பொருள்களையும் அடுத்து வரும் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து பென்சனை பாதுகாத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்..மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட தளவாடச்சாமாண்கள் உடைந்துபோனால்
அதைப்பராமரித்து மீண்டும் மாணவர்கள் பயன்படுத்தச்செய்வதில்லை.இப்படி திறந்த வெளியில் கிடப்பவையெல்லாம் ஓட்டை உடசல்கள் அல்ல! நல்ல நிலைமையில் இருப்பவைதான்..இப்படி வெய்யிலிலும், மழையிலும் கிடந்தால் சில மாதங்களில் கரையான்களுக்கு இரையாவதைத்தவிர வேறில்லை..இவையெல்லாம் மாணவிகளின்கல்விக்கட்டணத்தால்,பொற்றோர் ஆசிரியர் கழகத்தின் நன்கொடை போன்றவற்றால் வாங்கப்பட்ட பள்ளிச்சொத்துக்களாகும்.இவை தேசத்தின் சொத்துக்களாகும்..இவைகளை இப்படி போட்டு வைப்பதையும் ஒரு குற்றமாகக்கருத வேண்டும்.

இது தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பழமையான நல்ல நிலைமையில் இரு ந்த பீரோ! ஏதோ ஒரு காரணத்திற்காக பள்ளிக்குள் இருந்து வெளியே மைதானத்தில் நிறுத்தி வைத்தது, பலமான காற்று காரணமாக கீழே விழு ந்து விட்டது..மரம் கூட விழுந்துள்ளது! பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை..சில நாட்களுக்குப்பிறகு ரூ.15000/-மதிப்புள்ள இந்த பீரோவின் நிலையைப்பாருங்கள்....


இதுவே தலைமையாசிரியர் அல்லது ஆசிரியரின் சொந்த சொத்தாக இருந்தால் இப்படி விடுவார்களா?

பள்ளியின் சுவற்றில் பறவைகளின் எச்சம் காரணமாக மரம் முளைக்கும்..உடனே அதை சுவறில் இருந்து அகற்றி, அதன் வேரில் ஆசிட் அல்லது மெர்க்குரியை ஊற்றினால் மரம் பட்டுவிடும்..அப்படியே விட்டால் என்னவாகும்! மரம் பெரிதாகும்..வேர்கள் சுவற்றைப்பிளக்கும்..கட்டடம் பலவீனப்பட்டு ஒரு நாள் விழும்...மாணவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால்..வரும் முன் காப்பது பள்ளி நிர்வாகத்தின் கடமையாகும்..

சமீபத்தில் உடுமலை வட்டத்தில் ஒரு நடு நிலைப்பள்ளியின் உபயோகிக்கமுடியாத வகுப்பறைக்கு அருகே இருந்த வகுப்பறையில் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தபோது, தலைமையாசிரியர் அங்கு வருகிறார்..அருகில் உள்ள வகுப்பறையின் நிலைமை கண்டு மாணவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். மாற்றிய ஒரு மணி நேரம் கழித்து பழுதான வகுப்பறைச்சுவர் விழு ந்து மாணவர்கள் படித்துக்கொண்டிரு ந்த வகுப்பறையும் விழுகிறது..30 மாணவர்கள் தலைமையாசிரியரின் வரும் முன் பாதுகாப்பால உயிர்பிழைக்கின்றனர்.கீழே உள்ளது ஒரு பள்ளியில்

உள்ள வகுப்பறைதான்.இதைப்போல உள்ளவற்றை அகற்ற பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை தலைமையாசிரியர் எடுக்கவேண்டும்..அவர் நினைத்தவுடன் அகற்ற முடியாது..கல்வித்துறைக்கு கடிதம் எழுத வேண்டும்..பொதுப்பணித்துறை அதிகாரிகளைப்பல முறைபார்க்கவேண்டும். நடையாய் நடக்கவேண்டும்..என்ன செய்வது! செய்து தான் ஆகவேண்டும்.

தற்போது மழை பெய்து கொண்டுள்ளது..ஆமாம் !அதற்கென்னஎனக்கேட்கிறீர்களா? இன்று தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் சர்வ சிக்‌ஷான் அபியான் மூலமாக கான்கிரீட் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன..மேல் நிலைப்பள்ளிகள் எல்லாம் மாடியுடன் கூடிய வகுப்பறைகளில் தான் செயல்படுகின்றன. மரங்கள் இல்லாத பள்ளிகளைப்பார்ப்பது அரிது..பள்ளிகளின் மேல்தளத்தில் மரம் செடிகளின் இலைகள், குப்பைகள் படிந்திருக்கும். மழை நீர் வெளியேறும் குழாயில் இவைகள் அடைத்துக்கொண்டிருந்தால் மழை நீர் வெளியேறாமல் மாடியிலேயே தேங்கிவிடும்..இப்படி தேங்கும் மழை நீர் கான்கிரீட்டில் புகு ந்துவிடும். நாளைடைவில் கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பூச்சுகள் பெயர் ந்து வகுப்பறைகள் விழும் அபாயம் ஏற்படும்.
மொட்டை மாடியில் சவுண்டால் இலை,காயகள்,விதைகள் அடைத்துள்ளன.

தண்ணீர் போக வழி இல்லாமல் தேங்கி நிற்கும் மழை நீர்..


(2-12-10 அன்று திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியின் வகுப்பறை இரவு விழுந்தது. நல்ல வேளை பகலில் விழவில்லை! நன்றி தினகரன் 3-12-2010)
வகுப்பறையின் உள் சுவரில் நீர் கசிவு ஏற்பட்டு சுவர் ஈரமாக உள்ளது.


அடைப்புகள் நீக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகிறது.
அட போங்கப்பா...ஆசிரியர்களாகிய நாங்கள் இதையெல்லாம் மாடி மேலே ஏறி பார்க்கச்சொல்கிறீர்களா? நாங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடம் நடத்துவதா?அடிக்கடி நடக்கும் பயிற்சிகளுக்குச் செல்வதா? மக்கள் தொகை கணக்கெடுக்கச்செல்வது போன்ற எத்தனையோ வேலைகள்..அதில் இதெல்லாமா நாங்கள் பார்ப்பது? இதெல்லாம் பொதுப்பணித்துறையினரின் வேலை! நகராட்சியின் வேலை..என்பீர்கள்..ஓரளவு உண்மை இருக்கலாம்..ஆனால் இது நமது சமுதாயக்கடமை...

வீசும் காற்றுக்கும், பாயும் ஆற்றுக்கும் இலக்கில்லாமல் இருக்கலாம்...
ஆனால்..................... நாம் மனிதர்கள்...அதுவும் ஆசிரியர்கள்..எதிர்காலச்சமூகத்தை உருவாக்கும் பிரம்மாக்கள்..... நம்மால் முடியாவிட்டால் பள்ளியில் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கூறினால் அவர்கள் செய்து விடுவார்கள்...


1200 ச.அடி பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட குப்பையின் ஒரு பகுதி..

சுத்தம் செய்யப்பட்ட மாடியின் தோற்றம்..விரிசல்கள் உள்ளன. இவற்றைக்கொத்தி மீண்டும் பூச வேண்டும்.அப்போது தான் மழை நீர் கான்கிரீட்டிற்குள் செல்வதைத் தடுக்கமுடியும்....அரசு, நகராட்சிப்பள்ளிகளை துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கமுடியும்..

இதைப்பாருங்கள்.........தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர் அதிபர்களுக்கு சமூக அக்கறையே கிடையாது என்பதற்கு இது போன்ற ஆபாசமான சினிமா போஸ்டர்களை அரசு/ நகராட்சிப்பள்ளிகளின் சுவரில் ஒட்டுவதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.அவரா ஒட்டுகிறார் எனக் கேட்கிறீர்களா?அவர்கள் வந்து ஒட்டுவதில்லை.ஆனால் ஒட்டும் நபரிடம் பள்ளிச்சுவர்களில் ஒட்டாதே எனக்கூறலாம் அல்லவா? நோட்டிஸ் ஒட்டாதீர்கள் என எழுதி வைத்திருந்தாலும் ஒட்டிவிடுவார்கள்.எ ந்த தலைமையாசிரியரும் போலீசில் புகார் செய்வதில்லை.. நமக்கேன் வம்பு..என்ற எண்ணம் தான்..சில சமயம் பத்திரிக்கைகள் இது மாதிரி போஸ்டர்களை எடுத்துப்போட்டவுடன் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்.ஒரு மாதம் ஒட்ட மாட்டார்கள்.பின்பு ஒட்ட ஆரம்பித்து விடுவார்கள்.இதை எப்படி தடுப்பது? பள்ளிச்சுவரில் முதலில் ஒரு சிறிய போஸ்டர் ஒட்டியிருந்தால் கூட உடனே சம்ப ந்தப்பட்டவர்களிடம் போனில் கூப்பிட்டு புகார் செய்து அவர்களையே சுத்தம் செய்யச்சொல்லலாம்...அவர்கள் செய்யவில்லையென்றால் பள்ளி நிர்வாகமோ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரோ கூட இதைச்செய்யலாம்.


சுத்தம் செய்த பின்பு சுவரை அப்படியே விடக்கூடாது. நகரில் உள்ள பிரபல வியாபார நிறுவனங்களை அணுகி பள்ளி பெயர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்களை எழுதிவைக்கலாம். கால் பகுதி அவர்களின் விளம்பரத்தையும் எழுதிக்கொள்ளச்சம்மதித்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் முன்வருவார்கள். கீழே பாருங்கள்....புரியும்....
பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!

Thursday, October 14, 2010

உலக மாணவர் தினமாக கொண்டாடுவோம்!
உலக மாணவர் தினவிழா! பாரத ரத்னா டாக்டர் அ.பெ.ஜெ.அப்துல்கலாம் (15-10-2010) அவர்களின் 80 வது பிறந்தநாள்!

(புகைப்படங்களை பெரிதாக்க கிளிக் செய்யுங்கள்)
14-10-2010 அன்று இரவு 10 மணிக்கு,அப்துல் கலாம் அவர்களின் இணைய தளத்தில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை மின்னஞ்சலில் அடித்துக்கொண்டிருந்தேன்.அப்போது ...ஒரு போன். சார்! நான் பார்த்திபா பேசுகிறேன்..எனக்கு ஒரே குழப்பம்.யார் பார்த்திபா?.சார் நான் தான் ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவி..டெல்லிக்கு ஜனாதிபதி அவர்களைப்பார்க்க வ ந்தவர்களில் நானும் ஒருவள் சார்! நமது ஜனாதிபதி அவர்களுக்கு நாளை 80 வது பிறந்த நாள்..பள்ளியில் வருடா வருடம் அவருடைய பிறந்தநாளைக்கொண்டாடுவீர்கள்..இந்த வருடம் உண்டா சார் என்றார். நான் தற்போது பெற்றோர்-ஆசிரியர் கழக பொறுப்பில் இல்லை.!.பள்ளியில் கொண்டாடுவார்களா எனத்தெரியாது..ஆனால் 15-10-2010 அன்று மத்தியரசின் நிதியுதவியுடன் ” இன்ஸ்பியர் அவார்டு” என்கிற அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. நமது பேரண்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளன்று இக்கண்காட்சி நடைபெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.இக்கண்காட்சியில் அறிவியல் மாதிரிகளை செய்வதற்கு ஒவ்வொரு மாணவனுக்கும் மத்தியரசு ரூ.5000/-ம் வழங்கியுள்ளது.. நாளை பள்ளிக்கு வந்தால் நூற்றுக்கணக்கில் மாணவ அப்துல்கலாம்களைக்காணலாம் என்றேன்.

சார் எனக்குமட்டுமல்ல பல பேர்களுக்கு 15-10-2010 அன்று யுனெஸ்கோ நிறுவனம் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை உலக மாணவர்தினம் என்று அறிவித்துள்ளது என எஸ்.எம்.எஸ்.வருகிறது..அது உண்மையா எனத்தெரியவில்லை.. ஆனால் நாம் கொண்டாடுவோம் என்றார். எப்படி என்றேன்.. நாமெல்லாம் டெல்லி போய் அவரைப்பார்த்தமில்லையா?அதை உங்கள் பிளாக்கில் போட்டு கொண்டாடுவோம் என்றார்.


நமது கல்விக்கூடங்களில் வருடத்திற்கு ஒரு முறை கல்விச்சுற்றுலாவிற்கு மாணவ மாணவிகளை தமிழ் நாட்டிற்குள் அழைத்துச்செல்வார்கள்.இது மாணவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டும் நமது நாட்டின் பல்வேறு இடங்களில் வாழும் மக்களின் கலாச்சாரம்,மொழி,பண்பாடு போன்றவற்றை நேரில் காண்கின்ற கல்வியாகவும் கொள்ளலாம்..அரசுப்பள்ளிகளில் சென்னை,கன்னியாகுமரி,மதுரை,கொடைக்கானல்,ஊட்டி, மைசூர்,கேரளா தவிர வேறு மாநிலத்தைத்தொட்டதில்லை..மெட்ரிகுலேசன் பள்ளிகளில் டெல்லி,சிம்லா,ஜெய்பூர் எனக்கலக்குவார்கள்..திருப்பூரில் ஒரு சில மேட்டுக்குடி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சிங்கப்பூர்,மலேசியா எனப்பின்னியெடுக்கிறார்கள்.

அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெற மத்தியரசு ரயில்களில் சுற்றுலா செல்ல மாணவர்களுக்கு சலுகையளிக்கிறது.ஆனால் இச்சலுகையைப்பெற ரயில்வே கோட்ட அலுவலகம் சென்று கொஞ்சம் அலைய வேண்டும்..இதற்குப்பயந்தே பல பள்ளி நிர்வாகங்கள் தமிழகத்தைத்தாண்டி செல்வதில்லை..ரிஸ்க் எடுப்பதில்லை!திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழகப்பொறுப்பில் இருந்த நானும், தலைமையாசிரியையாக இருந்த திருமதி.ஜரீன்பானு பேகம் அவர்களும் 2005-ம் ஆண்டு அரையாண்டுத்தேர்வு விடுமுறையின் போது ,அரசுப்பள்ளிகளின் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுகின்ற( அதாவது தமிழகத்திற்குள்ளேயே சுற்றுலா செல்வது)சுற்றுலா மெளனத்தைக்கலைக்கவிரும்பினோம்...அது தான் டெல்லிச்சுற்றுலா?

டெல்லிச்சுற்றுலா என சுலபமாக முடிவெடுத்துவிட்டாலும் மாணவிகளின் குடும்பச்சூழ் நிலைமை இடம்கொடுக்குமா? ரூ.3000-ம்வரை செலவாகும்..மாணவிகளால் தரமுடியுமா? இருபது சேர்ந்தால போதும்..டெல்லிச்சுற்றுலாக்கனவை நிறைவேற்றிவிடலாம் என நினைத்தோம்..ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத அளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்ப முன்வந்தனர்.105 மாணவிகளுக்கு மேல் ரயிலில் இடம் கிடைக்காததால் பல மாணவிளை அழைத்துச்செல்லமுடியவில்லை என்பது வருத்தமே!இப்பள்ளி மாணவிகளில் பல பெற்றோர்கள் கூலிவேலைக்குச்சென்றாலும் தனது மகள் டெல்லியைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல்காரணமாக கடன் வாங்கவும் தயங்கவில்லை. ஒரு மாணவிக்கு அப்பா இல்லை..அம்மா மட்டுமே ! அவரும் கூலிவேலைக்குத்தான் செல்கிறார்..அவருடைய நிலைமை தெரிந்து அம்மாணவியை டெல்லிக்கு வேண்டாம்,.அம்மாவிற்கு கஷ்டத்தைக்கொடுக்காதே எனக்கூறி மறுத்தோம்..


அடுத்த நாள் அம்மாணவியின் அம்மா பள்ளிக்கு வந்தார். எனது மகளை டெல்லிக்கு ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? எனக்கேட்டார். நாங்கள் உங்களுடைய வருமானமே மாதம் ரூ.3000/தான். உங்களுக்கு கஷ்டம் தர விரும்பவில்லை என்றோம்..இது தானா காரணம்! இந்தாருங்கள் பணம் என்றார்.ஏது பணம் என்றோம்.என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தைவிட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச்சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப்பார்க்கவேண்டும்..தாஜ்மகாலைப்பார்க்கவேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச்சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காணவேண்டும் என்று கண்கலங்கச்சொன்னது இன்று நினைத்தால் கூட கண்கலங்குகிறது. ஒரு படிக்காத ஏழைத்தாயைகூட நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் ஆளுமை எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பதையும்,அவருடைய பிற ந்த நாளை உலக மாணவர் தினமாகவோ அல்லது இந்திய இளைஞர் தினமாகவோ கொண்டாடவேண்டும் என்பது மிகவும் பொருத்தமானதாகும்.

உலக அதிசியமான தாஜ்மகாலை மட்டுமல்ல இ ந்தியாவின் தலை நகரமான டெல்லியை மாணவச்சமுதாயம் பார்க்கவேண்டும்..இந்தியாவின் முகலாயர்கால 700ஆண்டுக்கான வரலாற்றுச்சின்னங்கள் பெரும்பாலும் அங்கேதான் உள்ளன.இந்தச்சுற்றுலாவுடன் நாங்கள் ,ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வலியுறுத்திய நீர் மாசுபாடு, நீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வையும் நாங்கள் செல்லும் இடங்களில் பரப்ப விரும்பினோம். இரண்டு பேருந்தில் விழிப்புணர்வு வாசக பேனர்களையும் கட்டிக்கொண்டோம். 105 மாணவிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது சுலபமாக கூட்டத்தில் அடையாளம் தெரிய 105 மாணவிகளுக்கும் டீம் ஸ்பிரிட் கம்பெனி நிர்வாகம் பனியனில் அப்துல்கலாம அவர்களின் போட்டோவுடன் அவருடைய புகழ்பெற்ற கவிதையை யும் அச்சிட்டு தந்தனர்.(அதைத்தான் மாணவிகள் அணி ந்துள்ளனர்.)
.


நான் உட்பட 10 ஆசிரியைகள்,3 ஆசிரியர்கள் மற்றும் 105 மாணவிகள் 24-09-2005 அன்று டெல்லி சென்றோம். ஆக்ரா சென்று தாஜ்மகாலைப்பார்த்த மாணவிகள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆரவாரம் செய்து தாங்கள் இது வரை சினிமாவில் மட்டுமே பார்த்த உலக அதிசியத்தை நேரில் கண்டதால் இது உண்மையா அல்லது கனவா எனக்கிள்ளிப்பார்த்துக்கொண்டனர். இதே நிலைமைதான் செப் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவுடனும் நிகழ்ந்தது.


மேண்மைமிகு நமது அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாகும் முன்பு,வெளி நாட்டு அதிபர்களுக்காகவும்,பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்ட மிகப்பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகையின் கதவுகள் இவர் வ ந்த பின்புதான்ஆயிரக்கணக்கான மாணவர்களுக்காகவும்,சாமானிய மக்களுக்காகவும் திறக்கப்பட்டது. உள்ளே சென்றவுடன் மென்மையான இனிமையான இசையை இசைக்கலைஞர்கள் இசைத்து வரவேற்றனர். அனைவருக்கும் ஜிலேபி,இட்லியும்,வடையும், காபியும் தரப்பட்டு, மன்னர்களின் தர்பார் மண்டபம் போல காட்சியளித்த அறையில் அமரவைக்கப்பட்டோம்.
சிறிது நேரத்தில் இந்திய மாணவச்சமுதாயத்திற்கு தனது உரையின் மூலமும்,எழுத்தின் மூலமும் கனவு காணுங்கள்..கனவு ஒரு நாள் நிறைவேறும் எனக்கூறி ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி அவர்கள் உள்ளே வ ந்தார். வ ந்தவுடன் மாணவிகளிடம் சென்று டிபன் சாப்பிட்டீர்களா எனக்கேட்டு இ ந்திரலோகத்து பதவியில் அமர் ந்தாலும் தமிழர்களின் விருந்தோம்பலுக்கு உதாரணமாக மாணவிகளிடம் கேட்டது மட்டுமில்லாமல் சாப்பிட்டதைச்சொல்லு எனக்கேட்டு உறுதியும் படுத்திகொண்டார்.பள்ளியின் 6000-ம் மாணவிகளின் சார்பாக ஓவிய ஆசிரியை திருமதி.வளர்மதி அவர்கள் 1500 அமெரிக்கன் டைமண்ட் மூலம் உருவாக்கிய அவருடைய உருவப்படத்தை அவருக்கு வழங்கியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். கற்பகம் என்ற ஆசிரியை அவரைப்பற்றி வாசித்த கவிதியை மெய்மற ந்து ரசித்தார்.
எமது பள்ளி மாணவிகளிடம் 40 நிமிடம் கேள்விகள் கேட்டு உரையாடினார்.அவர் பேசும்போது கூறியது,35 சதமாக இருந்த காடுகள் 16 சதமாக குறைந்துவிட்டது.எனவே பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொருவரும் தலா 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.


நம் நாடு 5 துறைகளில் முன்னேற வேண்டியுள்ளது. 1. விவிசாயம்,உணவு பதப்படுத்துதல்,. 2.ஆரோக்கியம்,பெண்கல்வி. 3.தகவல் தொழில் நுட்ப வசதி கிராமங்களுக்கும் கிடைத்தல்,4. நீர் மின்சாரம் 5.சொ ந்தக்காலில் நிற்கும் வேலை வாய்ப்பு ஆகும்.
நீங்கள் எல்லாம் திருப்பூரில் இருந்து வ ந்துள்ளீர்கள்..படித்து முடித்தவுடன் வேலை தேடுபவராக இல்லாமல் ஒவ்வொருவரும் பலபேர்களுக்கு வேலை தருகின்ற தொழிலதிபர்களாக வரவேண்டும்..இ ந்தியா வளர் ந்த நாடாக மாறுவது உங்களைப்போன்ற மாணவ சமுதாயத்தினர் கைகளில் தான் உள்ளது எனக்கூறி தோட்டத்தில் வ ந்து ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் .இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் மாணவச்சமுதாயத்தைப்பற்றியும், இந்தியா வளர்ந்த நாடாக மாறவும், நீடித்த வளர்ச்சியடைய இவரைப்போல சிந்தித்து செயல்பட்டவர் வேறு எவரும் இல்லை.. எனவே அவருடைய பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக இ ந்தியரசும், குறிப்பாக தமிழகரசும் மாபெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். இது தான் மாணவச்சமுதாயம் எதிர்பார்க்கிறது.

வாழ்க பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்!

Wednesday, September 29, 2010

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!


(அல்லி பூ பதிவு 2)
அல்லிக்குளம்(Nymphaea nouchali)வைக்கலாம் வாருங்கள்!

நீல அல்லி.

அடடே! தவளையாரே!! இலை மேல் உட்கார் ந்து என்ன பார்க்கிறாய்?

நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதைத்தான் நானும் பார்க்க வ ந்தேன்!


ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியில் உள்ள அல்லிக்குளத்தைப்பார்வையிடும் பிற பள்ளி மாணவ-மாணவிகள்.


சந்திரனைக்காணாமல் அல்லி முகம் மலருமா? என்ற கண்ணதாசன் பாட்டிற்கு அழகு சேர்க்கும் வெள்ளை நிற ஆம்பல் என்கிற அல்லி !...

குவளை என அழைக்கப்படும் நீல அல்லி.

பூக்களை ரசிக்காத மனிதர்கள் உண்டா? அப்படி ஒரு மனிதன் இன்னும் பிறக்கவில்லையென்றே சொல்லலாம்.. பூக்களைப்பறித்து அதுவும் அடுத்தவர் வீட்டு பூவைப்பறித்து சாமிக்கு வைப்பதில் ஒரு குஷி இருக்கிறதே சொல்லி மாளாது! சாமி பூ கேட்டதாகத்தெரியவில்லை!ஆசாமிகளாகிய நாம் தான் சாமிகளுக்கு பூ கோர்த்து மாலையாக அணிவித்து மகிழ்கிறோம்...பூக்களின் அழகைக்கண்டு சொக்கிவிடுகிறோம்! பூக்களின் மணமும்,அதன் கல்ர்,மென்மை போன்றவை நமது கவலைகளை மறக்கச்செய்து,மன அழுத்தங்களை குறைத்து விடுகிறது.அதிலும் தாமரை,அல்லி போன்ற நீர்வாழ்தாவரங்களின் பூக்களின் அழகைத்தான் நீங்களே பார்க்கிறீர்களே!


நமது பள்ளிப்பாடங்களில் நீர்வாழ் தாவரங்கள்,உயிரினங்கள் பற்றி புத்தகத்தில் உள்ளவற்றைப்பார்த்து செயற்கையாக சொல்லித்தருகிறார்கள். அதற்குப்பதிலாக ஒரு அல்லிக்குளத்தை உருவாக்கி,அதில் மீன்களை விட்டு வளர்த்தால்....படிப்பதை விட ,நேரில்பார்ப்பது குழந்தைகளின் மனதில் ஆழப்பதியுமல்லவா? அதன் விளைவுதான் இந்த அல்லிக்குளங்கள்!
அல்லிக்குளத்தை படத்தில் உள்ளது போலவோ அல்லது வட்டமாகவோ 3அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டி,செங்கல் கொண்டு கட்டி பூசி விடுங்கள்..தரையிலும் பெரிய ஜல்லி கொண்டு கான்கிரீட் போட்டு பூசி விடுங்கள்.. குளம் இப்போது ரெடி! குளத்தினுள் ஒரு அடி ஆழத்திற்கு களிமண்,கொஞ்சம் மணல்,செம்மண் கலந்து போடவேண்டும்..எருக்கந்தலையை கொஞ்சம் மண்ணில் போட்டு அமுத்தி விட்டு,2 அடி உயரத்திற்கு தண்ணீர் ஊற்றி அல்லி நாற்றை தண்ணீரில் முழுவதும்(அல்லி செடி நர்சரிகளில் கிடைக்கும் விலை ரூ.150-ல் இருந்து இருக்கிறது)மூழ்கும்படி நட்டு வையுங்கள்..அல்லிக்கொடி மேலே வர வர தண்ணீர்மட்டத்தை உயர்த்தவேண்டும்.


குளத்தில் தண்ணீர் தெளிந்தவுடன் சாதாரண மீன்கள், வண்ண மீன்களை வாங்கிவிடுங்கள். கொசு வருமே என்ற பயம் வேண்டாம..மீன்கள் கொசு முட்டைகளை சாப்பிட்டு விடும்.. சிறிய குழந்தைகள் இருந்தால் பாதுகாப்பு
செய்யவேண்டும்..


ஒரு மாதததில் பூக்கத்தொடங்கும்.. பல (6,7) கலர்களில் அல்லி நாற்றுகள் கிடைக்கிறது..இதில் பகலில் /இரவில் பூக்கும் அல்லிகள் இரண்டையும் வைத்துவிட்டால் அல்லிக்குளத்தில் எப்போதும் பூ இரு ந்துகொண்டே இருக்கும்.
1
2
நமது வீடுகளில் அல்லி வளர்ப்பது நமது மனதுக்கு அமைதியைக்கொடுக்கும். இரண்டு அடி விட்டமுள்ள சிமெண்ட் தொட்டி, சின்டெக்ஸ் தொட்டிகளில் கூட வளர்க்கலாம். என்ன பூ கொஞ்சம் சிறியதாக இருக்கும்..


3

நெய்தல் மலர்(அல்லி) பூக்கத்தொடங்கும் கண்கொள்ளாக்காட்சியைப்பாருங்கள்.
4

5

6

7

8

9

10

குளத்தை நாடி பறவைகளும்,தவளை போன்றவைகளும் வரும்..தவளையை வைத்து கரு ,முட்டை,தலைப்பிரட்டை போன்றவைகளைச்சொல்லிக்கொடுத்து குழந்தைகளைக்கு குதூகலமூட்டலாம்....

முதல் பதிவு: மொட்டு மலராகும்!மலர்ந்த பூ மொட்டாகுமா ?

ராணி ரூபா தேவி.. RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH.                ராணி ரூபா  தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெய...