கல்வித் தாஜ்மகாலுக்கு வெற்றி !




               


             கல்வித்தாஜ்மகாலுக்கு வெற்றி...!!...                           
                                               


                                                                                                                    
                           திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7000-ம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியானது மழை நீர் சேகரிப்பிற்காக 2002-ம் ஆண்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கையால் பரிசையும், பாராட்டையும் பெற்ற பள்ளியாகும். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து வந்ததில்,  இந்தியளவில் 10 முறை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு விருதையும், மூன்று முறை இந்திய விஞ்ஞானிகளின்  மாநாட்டில் பங்கேற்றும் சாதனை படைத்துள்ளது. 1994 முதல் இப்பள்ளியின் பெ.ஆ.கழகத்தால் மாணவிகளுக்கு கணிப்பொறிகல்வி அளித்து வந்ததன் காரணமாக 2003-ம் ஆண்டில் மத்தியரசின் சிறந்த கணணிக்கல்விக்கான பரிசையும், விருதையும் மேன்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் பெற்றுள்ள பள்ளியாகும். 2005-ம் ஆண்டில் தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் செயல் வீரர்களுக்கான பரிசையும் பெற்ற பள்ளியாகவும் திகழ்கிறது.
                          ..                           
திருமதி.ஜரீன்பானுபேகம்.
      
             
         இப்பள்ளியின் தலைமையாசிரியைகள் திருமதி ஆ.ஜரீன்பானுபேகம் 2002-ம் ஆண்டிலும், திருமதி அ.விஜயாஆனந்தம் 2007-ம் ஆண்டிலும்   தேசிய நல்லாசிரியர் விருது பெற்று சாதனை படைத்த பள்ளியாகவும் திகழ்கிறது. இந்தியளவில் அரசு/
நகராட்சிப்பள்ளிகளுக்கு சுற்றுச்சூழலிலும், பெண்கல்விக்கும் முன் உதாரணமாக இப்பள்ளி திகழ்கிறது. 

ப்பங்கள்
 
இப்பள்ளியின் வரலாறே.. யாது ஊரே யாவரும் கேளீர் என்பதற்கு ஏற்ப, குஜராத்தில் இருந்து திருப்பூருக்கு வியாபாரம் நிமித்தமாக வந்த திரு தேவ்ஜி ஆஷர் என்பவர் இளம் வயதில் (33 வயது) தனது மனைவி திருமதி ஜெய்வாபாயின் மரணத்தருவாயில்(1937-ம் ஆண்டு) திருப்பூரில் பெண்களுக்கென தனியாக உயர் நிலைப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 1942-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் இப்பள்ளியாகும். இவ்வரலாற்றை கேள்விப்பட்ட எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் இதனை கல்வித்தாஜ்மகால் என்று அழைத்தார்.
              





        ஆரம்பகாலத்தில் வாலிபாளையம் துவக்கப்பள்ளியில் தொடங்கப்பட்ட இப்பள்ளிக்கு திரு.தேவ்ஜி ஆஷரின் விடா முயற்சியின் காரணமாக அன்றைய சென்னை மாகாண அரசு 1948-ம் ஆண்டு அரசு ஆணை எண் 1425-ன் படி ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்காக 7 ஏக்கர் 7229 சதுர அடியை கொடுத்தது. இந்த இடத்தில் திரு தேவ்ஜி ஆஷரும், அவருடைய மகன்களான கிருஷ்ணகுமார் & பிரதாப் இணைந்து பள்ளிக்கட்டடம், விளையாட்டு மைதானம், தோட்டம் உட்பட அமைத்து திருப்பூர் நகராட்சிக்கு தானமாக வழங்கினார்கள்.


        திருப்பூரில் 1955-ம் ஆண்டு ரோட்டரி கிளப் துவங்கப்படுகிறது. இதைத்துவங்கியவர்களில் ஜெய்வாபாய் பள்ளியை உருவாக்கிய தேவ்ஜி ஆஷரும் ஒருவராவார். ரோட்டரி கிளப்பின் கூட்டமே அவருடைய வீட்டில் தான் நடைபெற்று வந்தது.  ஒரு கட்டத்தில் ஆஷரின் ஆட்சேபனையை மதிக்காமல்  1960-ல் இருந்த ரோட்டரி கிளப் நிர்வாகத்தினர் மாண்டிசோரி பள்ளியும், மாதர் பூங்காவும் அமைத்து நகராட்சிக்கு  நன்கொடையாக அளிக்கிறோம் என்ற உறுதியின் பேரில் திருப்பூர் நகராட்சியும் 1960 ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் ஆஷர் ரோட்டரி கிளப்பை விட்டு விலகினார். ரோட்டரி கிளப்பினர் 1963-ல் ஜெய்வாபாய் பள்ளி வளாகத்திற்குள்  மாண்டிசோரி பள்ளி அமைத்தனர். ஆனால் மாதர் பூங்கா அமைக்கவில்லை. அதே சமயம் தாங்கள் கூறிய படி நகராட்சிக்கு தானமாகவும் அளிக்கவில்லை. தாங்களே வைத்துக்கொண்டனர். படிப்படியாக நர்சரி & பிரைமரி பள்ளி ஆரம்பித்து  பல கட்டங்கள் கட்டி ஒரு ஏக்கர் இடம் வரை ஆக்கிரமித்துக்
கொண்டனர். சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக பணபலம் படைத்தவர்களாக ரோட்டரி கிளப்பினர் இருந்த காரணத்தாலும், திருப்பூரில் இருந்த அனைத்து நகராட்சிப்பள்ளிகளும், நகராட்சியின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால்  அதிகாரிகளின் எதிர்ப்புகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1978-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் இருந்த நகராட்சிப்பள்ளிகளின் ( கட்டட பாராமரிப்பு தவிர) நிர்வாகம் முழுவதும் அரசுக்கல்வித்துறைக்கு வந்தது. ஜெய்வாபாய் உயர் நிலைப்பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

     
                            
            1987-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவரும், ரோட்டரி பள்ளியின் தாளாளரும் ஒருவரே ஆகும். இவர் செய்த துரோகத்தின் காரணமாகவும், இவருக்கு நகர்மன்றத்தலைவரிடமிருந்த  செல்வாக்கின் காரணமாக அன்றைய ஆணையாளரின் எதிர்ப்பையும் மீறி, நகர் மன்றத்தில் தீர்மானம் வருகிறது. திருப்பூர் நகர் மன்றத்தில் ஜெய்வாபாய் பள்ளிக்குச்சொந்தமான ஒரு  ஏக்கர் இடத்தை ரோட்டரி பள்ளிக்கு வழங்குவதற்காக வந்த தீர்மானம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின் அவர்களின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையறிந்து பதறிப்போய் நகர்மன்றத்திற்கு சென்ற  தலைமையாசிரியை செல்வி சாவித்திரியும், பிற ஆசிரியைகளும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவரால் மிரட்டப்பட்டார்கள்.  பின் 1989-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியில் பொறுப்பேற்றுக்கொண்ட பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரின் பார்வைக்கு இந்த நில ஆக்கிரமிப்பு கவனத்திற்கு வந்தது. அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.சி.கே.குப்புசாமி அவர்களும் இதைச்சுட்டிக்காட்டினார். அன்றைய முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சரசுவதி பழனியப்பன் அவர்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.



      1991 ம் ஆண்டில் ரோட்டரி கிளப்பினர் குறுக்கே கம்பிவேலி அமைத்து தெற்குப்பகுதியில் இருந்து மாணவிகளும் ஆசிரியைகளும் பள்ளியின் தென்புறக்கேட்டின் வழியாக பள்ளிக்குள் வருவதை தடுத்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பாக மாண்புமிகு இன்றைய முதல்வர் தான் அன்றும் முதல்வராக இருந்தார். அதனால் அவருக்கு தந்தியடிக்கப்பட்டது. அடுத்த நாளே கம்பி வேலியை இரவோடு இரவாக அகற்றினார்கள். ஜெய்வாபாய் பள்ளிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்தனர். 






  

           ஜெய்வாபாய் பள்ளியின் இடத்தை மீட்க வேண்டும் என்று  1990-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை ஏழு ஆண்டுகள் அரசிடமும், நகராட்சியிடமும் கோரிக்கை வைத்து கேட்டுப்பார்த்தனர். இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, மாறாக திருப்பூர்  நகர் மன்றத்தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு ஏக்கர் நிலத்தை ரோட்டரி பள்ளிக்கு 99 வருட குத்தகைக்கு விடுவதற்கு வருவாய்த்துறை ஏற்பாடு செய்தது. எனவே வேறு வழியில்லாமல் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து செயல் பட்டு வந்த தனியார் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியின் மீது ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளை  1996-ல் சென்னை உயர் நீதி மன்றத்தின் மூலம் பள்ளி இடம் குத்தகைக்கு விடுவதற்கு  தடையானை பெற்றனர்.                        
             சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே  கல்வித்துறையின் அடிப்படை விதியான 10(1) ஏபி ன் விதிகளுக்கு மாறாக (அதாவது  பள்ளியின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்கவேண்டும் அல்லது பள்ளியின் பெயரில் 30 வருட குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்தால் மட்டுமே பள்ளி தொடங்க முடியும்)  உண்மைக்கு மாறான தகவல்களை கல்வித்துறைக்குத்தந்து,  நகர் மன்றத்தீர்மானத்தின் அடிப்படையில்  ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழகத்தினரின் ஆட்சேபனையை புறந்தள்ளிவிட்டு, மெட்ரிகுலேசன் பள்ளியாக  மாற்றினார்கள்.
            அதே சமயம் கனியாம்பூண்டியருகே பள்ளிக்கட்டம் கட்டுவதற்காக வாங்கிய சுமார் 8 ஏக்கர் இடத்தில் 2003-ல் அன்றைய ரோட்டரி நிர்வாகத்தினர் முதியோர் இல்லம் கட்டி திறப்புவிழா செய்தார்கள். ஆனால் அதற்கு அடுத்து வந்த ரோட்டரி நிர்வாகத்தினர்கள் அந்த இடம் முழுவதையும் விற்று விட்டு, ராயபுரத்தில் சிவானந்த கலர் கம்பெனி அருகில் பள்ளி கட்டுவதற்காக இடம் வாங்கிப்போட்டார்கள். 2005-ம் ஆண்டு பதவிக்கு வந்த நிர்வாகத்தினர்கள், 26-3-2005ம் தேதியிட்ட தினமலரில், தாங்கள் ராயபுரத்தில் வாங்கியுள்ள இடத்தில் திருப்பூர் மக்களின் கல்விக்கனவை நினைவாக்கும் விதமாக பெரிய அளவில் ரூ ஒரு கோடி செலவில் மேல் நிலைப்பள்ளியாக வளர்ச்சி காணப்போகிறது என்று தெரிவித்துள்ளனர்.


         ஒன்பது ஆண்டுகள் சென்னை உயர்  நீதி மன்றத்தில்  நடைபெற்ற விசாரனையின் முடிவில்   W.P. எண்.19362/96 தேதி 24-6-2005-ன் படி ரோட்டரி கிளப்பினர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளிக்குள் உள்ள தங்கள் பள்ளியை 31-5-2006 க்குள் காலி செய்து வேறு இடத்திற்குச்செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஒரு வருடம் அவகாசம் அளித்து தீர்ப்பளித்தது.                                                                                                     
                 தீர்ப்பை ஏற்காத  திருப்பூர் ரோட்டரி கிளப்பினர் 2006-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில்(பென்ச்) ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழக அறக்கட்டளை, தமிழகரசின் வருவாய் செயலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவை, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர், ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் என ஐந்து பேர் மீதும் வழக்குப்போட்டு,  மேல் முறையீடு செய்தனர். இவர்களின் மேல் முறையீட்டு மனுவான  W.A. எண். 2211/2005 தேதி 28-2-2008 அன்று மீண்டும் சென்னை உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

       மீண்டும் ரோட்டரி கிளப்பினர் 2008-ல் மறு சீராய்வு மனு வழக்குப் போட்டனர். இந்த வழக்கில் மெட்ரிகுலேசன் பள்ளியின் இயக்குனர் மீதும் வழக்குப்போட்டனர். அப்போது “ இந்த இறுதித்தீர்ப்பும் தங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், தாங்களே தங்களது ரோட்டரி பள்ளி இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி விடுவதாக மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனருக்கும்,  உயர் நீதி மன்றத்திலும் எழுத்து பூர்வமாக தெரிவித்தனர்..   
                                                        

        சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கான R.A.(writ)எண்.61/2008 தேதி 22-10-2010. ன் படி இந்த மறு சீராய்வு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

           


  
  
          தாங்கள் ஏற்கனவே 2008-ல் கடிதம் மூலம் தெரிவித்தபடி திருப்பூர் ரோட்டரி கிளப்பினர் ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்த தங்கள் பள்ளி இடத்தை காலி செய்யவில்லை. இதற்கு மாறாக ரோட்டரி கிளப்பினர் சென்னை உயர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பினை எதிர்த்து சிறப்பு பெட்டிசன் மூலம் SLP 4053/2011  படி சுப்ரீம் கோர்ட்டில்,1) ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழக அறக்கட்டளை (2) வருவாய் செயலர், தமிழகரசு, (3) மாவட்ட ஆட்சித்தலைவர், (4) மாநகராட்சி ஆணையாளர் 5) ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் என ஐந்து பேர் மீதும் வழக்கு தொடுத்து சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக 2011-ல்  உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.
     திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழகரசும் இந்த தடையாணையை நீக்குவதற்கு 24-1-2014 ல் அபிடாவிட் தாக்கல் செய்தது. இந்த அபிடாவிட்டில், 1960 ம் ஆண்டு ரோட்டரி கிளப்பினர் நகராட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நடக்கவில்லையென்றும், ஜெய்வாபாய்  மாநகராட்சிப்பெண்கள் பள்ளியானது இந்தியாவிலேயே மிகச்சிறந்த நகராட்சிப்பள்ளியென்றும், திருப்பூர் மாநகராட்சிக்கு பெருமிதம் அளிக்கும் பள்ளியென்றும் கூறி, ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்து வெளியேற மறுக்கும் ரோட்டரி கிளப்பினரின் அப்பீல் மனுவை ரத்து செய்யுமாறு  கோரியிருந்தனர்.
                                         
         மேற்கண்ட வழக்கின் விசாரனை கடந்த மாதம் 30-6-2014 அன்றும், 07-07-2014 அன்றும் விசாரனைக்கு வந்தது. ரோட்டரி கிளப்பினரால் வாய்தா வாங்கப்பட்டது. இறுதி விசாரனை 30-7-2014 அன்று உச்ச நீதிமன்றத்தில்  விசாரனைக்கு வந்தது. உச்ச நீதி மன்றம் , 1948-ம் வருடம் அரசு ஆணை எண் 1425-ன் படி 7 ஏக்கர் 7229 சதுர அடி இடம் முழுவதும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்குச்சொந்தமானது எனக்கூறி,சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு செல்லும் எனக்கூறி ரோட்டரி கிளப்பினரின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்தது. ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளிக்குள் ஐம்பது ஆண்டுகால நில ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

      




        சென்னை உயர் நீதி மன்றத்தீர்ப்பின் அடிப்படையில் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளிக்கு 31-5-2006 க்குப்பின் அங்கீகாரம் இல்லையென்று மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரின் ந.க.எண் 2607/இ 3/2008 நாள் 29-5-2008 கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதி மன்றம் 2005-ம் ஆண்டே தனது தீர்ப்பில்  ரோட்டரி பள்ளியினர் தங்கள் பள்ளியை 31-5-2006 க்குள் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களும் ராயபுரத்தில் ரோட்டரி கிளப்பிற்கு சொந்தமான இடத்தில் மேல் நிலைப்பள்ளியை கட்டப்போகிறோம் என்று உயர் நீதி மன்ற தீர்ப்பு வரும் முன்பே 26-3-2005 அன்று செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டவர்கள்
24-6-2005 அன்று தீர்ப்பு வந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக  வழக்கிற்காக செலவழித்த  லட்சக்கணக்கான ரூபாயை வைத்து தங்கள் இடத்தில் பள்ளியை கட்டியிருக்கலாம்!. ஏன் கட்டவில்லை..? இவர்களுக்கு கல்வியின் மேல் அக்கறையில்லை என்பதையும்,  ரூபாய் நாற்பது கோடி மதிப்புள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர வேறில்லை என்றாகிறது. மேலும்  தங்கள் பள்ளிக்கு அங்கீகாரமோ, இடமோ இல்லையென்பதை பெற்றோர்களிடம் மறைத்து குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும்  சமச்சீர் பாடத்திட்டமே இருப்பதால் மாணவிகளை ஜெய்வாபாய் பள்ளியிலும், மாணவர்களை நஞ்சப்பா நகராட்சிப்பள்ளியிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ளவர்களை காதர்பேட்டை, தேவாங்கபுரம், ராயபுரம் நகராட்சிப்பள்ளிகளில் ஆங்கில வழி இருப்பதால் அங்கு சேர்க்க முடியும். எனவே தமிழகரசு ரோட்டரி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல் படுத்தினால் மட்டுமே 7000-ம் மாணவிகள் படிக்கும் ஜெய்வாபாய்  மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின்  கல்வி வளர்ச்சிக்கும், மாணவிகளின் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருக்கும் என்று பெற்றோர்-ஆசிரியர் கழகம் வேண்டுகோள் வைக்கிறது..
              

                                                                                   



           
       
  

 

Comments

Post a Comment

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..