Saturday, October 14, 2017

மேதகு அப்துல்கலாமும் ஜெய்வாபாய் பள்ளியும்..


மேதகு அப்துல் கலாம் அவர்களும் ஜெய்வாபாய்  நகராட்சிப்பெண்கள்

                              மேல் நிலைப்பள்ளியும்

                                     (ஜெய்வாபாய்ஈசுவரன்)
       திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிதான் இந்தியளவில் மிக அதிகமான அளவில் மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளியாகும். 2009-ம் ஆண்டு இந்தப்பள்ளியில் படித்த மாணவிகள் 7285 ஆகும்.  நான் இந்தப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பொருளாளராக, செயலாளராக, தலைவராக 1989-ம் ஆண்டு முதல் 2009 –ம் ஆண்டுவரை சேவைசெய்துள்ளேன். இந்தப்பள்ளியானது மேதகு பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுடன்  2001-ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்துவந்துள்ளது. அது பற்றி எங்களது நினைவலைகள் உங்கள் பார்வைக்கு…
          தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் ஏழாம் வகுப்பு மாணவிகள் ஆறுபேர் சேர்ந்து என்னுடையை வழிகாட்டுதலில் மழை நீர் சேகரிப்பு ஆய்வை நடத்தி இப்பள்ளியில் அதை அமுல்படுத்தியிருந்தனர். இந்த ஆய்வானது 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்த ஆய்வு மாணவிகளின் தலைவி தமீம் சுல்தானவும் நானும் இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டில் அப்துல் கலாம் அவர்களின் பேச்சினை கேட்டோம். அப்போது அவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் என நினைக்கிறேன். பேசிவிட்டு மேடையை விட்டு வரும்போது அவரிடம் அவர் எழுதிய அக்கினிசிறகு புத்தகத்தில் கையெழுத்து கேட்டோம்.. புத்தகம் தமிழில் இருந்ததால் மாணவியிடம் என்ன தமிழ் நாடா..? எந்தப்பள்ளி எனக்கேட்டு எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.(அப்போது இப்படி செல்போனோ, கேமராவோ இல்லாத காலம்)

         2001-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 27-ம் தேதி பூனாவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை மேதகு அப்துல் கலாம் அவர்கள்( அப்போது பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்)  துவக்கிவைத்து உரையாற்றினார். அப்போதுதான் அவருடைய பேச்சில் கனவு காணுங்கள் என்ற பேச்சினை கேட்டோம். பின் அவர் உறுதி மொழி வாசிக்க இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரம் மாணவர்களும் திருப்பி சொன்னார்கள். அதன் பின் மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சி அரங்கத்திற்கு வந்து மாணவர்கள் செய்திருந்த ஆய்வினைக்கேட்டறிந்தார். இந்த மா நாட்டிற்கும் ஜெய்வாபாய் பள்ளி மாணவி வி.பாரதியின் ஆய்வுக்கட்டுரை தேர்வாகி தேசியயளவில் கலந்துகொண்டிருந்த எங்களது ஆய்வுபற்றியும் கேட்டறிந்தார். எங்களது ஆய்வுத்தலைப்பு  அன்றைய கட்டடங்களையும் இன்றைய கட்டடங்களையும் ஒப்பீடு செய்திருந்தோம். எங்களது ஆய்வுத்தலைப்பை கேட்டவுடனே..
 அந்தக்காலத்தில் கடுக்காய் தண்ணீர், கரும்புச்சாறு, வெங்கைக்கல் பொடியெல்லாம் கொண்டு கட்டடம் கட்டியுள்ளனர். உங்கள் ஆய்வில் இதுபற்றியெல்லாம் எழுதியுள்ளீர்களா எனக்கேட்டார். டெல்லியில் ஒரு நிமிடம் மட்டுமே பேசமுட்டிந்த எங்களால், பூனாவில் சுமார் மூன்று நிமிடங்கள் எங்களுடன் பேசினார். இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத   நிகழ்வாக அமைந்தது.. எங்களின் ஆய்வறிக்கையை பார்வையிட்டு அதில் கையொப்பமும் இட்டார்


                  2002-ம் ஆண்டு மேதகு அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்த வருடம் தான் ஜெய்வாபாய் பள்ளியின் 60 ஆண்டுகால சரித்திரத்தில் முதல் முறையாக இப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.ஆர்.ஜரீன்பானு பேகம் தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதியின் கையில் பெற்று திருப்பூர் நகருக்கே பெருமை தேடித்தந்தார். 

அப்துல் கலாம் அவர்களின் அவருடைய முக்கியமான மேற்கோள்கள் பள்ளியின் சுவர்களில் வண்ணத்தில் எழுதப்பட்டு மாணவிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டது. இந்த ஆண்டும் தேசிய குழந்தைகளின் அறிவியல் மா நாட்டிற்கும், அதற்குப்பிறகு நடைபெறும் இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டிற்கும் இப்பள்ளியின் மாணவி சி.சவீதாவின் கிச்சன் கார்டன் என்ற ஆய்வுக்கட்டுரை தேர்வானது. இந்த இரண்டு மா நாட்டிற்கும் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் துவக்கிவைக்கும் செய்தி கிடைத்தது. அவருடைய புகழ்பெற்ற 10 அம்ச திட்டத்தை 60 அடி நீளம் கொண்ட துணியில் 10 அடிக்கு எழுதப்பட்டது. மீதியிருந்த 50 அடி நீளத்திற்கும் ஜெய்வாபாய் பள்ளியின் 6000-ம் மாணவிகளும் கையெழுத்திட்டு, இதனை மைசூரில் நடைபெறும் மா நாட்டிற்கு எடுத்துச்சென்று அந்த மா நாட்டின் இந்தியக்குழந்தைகள் அனைவரும் கையெழுத்திடுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த மா நாட்டின் துவக்கவிழா நிகழ்ச்சியின் போது  ஜெய்வாபாய் பள்ளி மாணவி சவீதா மேடையில் அவரிடம் பள்ளி சார்பாக ஆறாயிரம் மாணவிகள் அவரின்கவிதையில் கையொப்பமிட்ட புகைப்படத்தைக்கொடுக்க மேடைக்குச்சென்றபோது காவலர்களால் தடுக்கப்பட்டார். இதைப்பார்த்த அவர் மேடைக்கு அழைத்து மாணவியிடம் இருந்து புகைப்படத்தை வாங்கிக்கொண்டார். மைசூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு முடிந்தபின் அப்படியே பெங்களூரில் நடைபெற்ற இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டிலும் கலந்துகொண்டு(3-1-2003 முதல் 8-1-2003 வரை) அவருடைய உரையைக்கேட்டோம்.
                     பெங்களூரில் இருந்து திருப்பூர் வந்தவுடன், திருப்பூரில் உள்ள  நிட்மா சங்கத்தின் அகில் ரத்தினசாமி அவர்கள் என்னை அழைத்தார். எங்களுடைய சங்கத்தின் வெள்ளிவிழா மாநாட்டிற்கு ஜனாதிபதி அவர்களை அழைத்தோம். ஆனால் அவரோ வர மறுக்கிறார். உங்கள் ஜெய்வாபாய் பள்ளியின் மாணவிகள் சார்பாக அழைப்புவிடுங்கள்! திருப்பூர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றார். அதே போல ஜெய்வாபாய் பள்ளியின் 6000-ம் மாணவிகளும் திருப்பூருக்கு அவர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து அவருக்கு கடிதம் எழுதினோம். திருப்பூர் வர ஒத்துக்கொண்டு, ஜெய்வாபாய் பள்ளிக்கே வர விரும்பினார். ஜெய்வாபாய் பள்ளியில் 6000-ம் மாணவிகளும் அமர ஆடிட்டோரியம் இல்லாத 
காரணத்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும்  வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளை சந்தித்தார்அப்போதுஇப்பள்ளி மாணவி மழை நீர் சேகரிப்பு இளம் விஞ்ஞானி தமீம் சுல்தானா வரவேற்பு பூங்கொத்து கொடுத்தார்அவரிடம் மழை நீர் சேகரிப்பு ஆய்வு அமுல் படுத்தியது பற்றி கேட்டறிந்தார்.

         2003 -ம் ஆண்டு மத்தியரசு இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்பான முறையில் கணணிக்கல்வியை அமுல் படுத்திய அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விருது அளித்தது. இந்த விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளி தேர்வானது. ஜனாதிபதி அவர்கள் விருது அளிக்கும் நிகழ்ச்சியானது, தேர்தல் காரணமாக கடைசி நேரத்தில் அப்துல் கலாம் அவர்கள் ரத்து செய்துவிட்டார். அவருடைய கையால் விருது பெறும் பாக்கியம் கிடைக்காமல் போனது. ரத்து செய்யப்பட்ட விருது பற்றி அவருக்கு பள்ளி சார்பாக கடிதம் எழுதினோம். பின் இந்த விருதுக்கான விழா 4-8-2004-ம் அன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த விருதை   நான் கணிப்பொறிக்கல்விக்கான தேசிய விருதை( சீல்டு மற்றும் ரூ.1,50,000)  அவர் கையால் பெறும்போதுஅப்போது உடன் இருந்த மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் திரு.தயா நிதி மாறன் அவரிடம்  ஜெய்வாபாய் நம்ம  தமிழ் நாட்டு பள்ளிக்கூடம் எனக்கூறியபோதுஎனக்கு ஜெய்வாபாய்பள்ளி பற்றி நன்றாகவே தெரியும் எனக்கூறியதைக்கேட்டதும் அமைச்சர் அசந்துவிட்டார்..இந்தக்காட்சி இன்றும் என்னுடைய மனக்கண்ணால் காணமுடிகிறது.

          2005-ம் ஆண்டில் பல மாணவிகள் என்னிடம் , எங்களுக்கு ஜனாதிபதி அவர்களுடன் பேசவேண்டும், பார்க்கவேண்டும் என்று ஆவலாக உள்ளது. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். நானும் தலைமையாசிரியை அவர்களுடன் கலந்து, மாணவிகள் இப்படி கேட்கின்றனர். அவரை நிறைய மாணவிகள் சந்திக்கவேண்டும் என்றால் டெல்லிதான் செல்லவேண்டும். காலாண்டு விடுமுறையில் கல்விச்சுற்றுலாவிற்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களை வட நாட்டிற்கு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வது போல நமது நகராட்சிப்பள்ளி மாணவிகளும்  டெல்லி சென்றால் ஒரு வேளை மாணவிகளின் ஆசையை நிறைவேற்றலாம் எனக்கூறினேன்.  பல ஆசிரியைகள், தமிழ் நாட்டிற்குள் கல்விச்சுற்றுலா செல்வதற்கே நமது மாணவிகளுக்கு பொருளாதாரம் இடம் தராதபோது, டெல்லிக்கு சுற்றுலாவிற்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்றார்கள். ஆறாயிரம் மாணவிகளில் 10 முதல் 12-ம் வகுப்புவரையுள்ள 2000-ம் மாணவிகளுக்கு அழைப்பு விடுப்போம். சுமார் 40 மாணவிகள் வந்தால்கூடப்போதும் டெல்லி செல்லலாம் என முடிவெடுத்து அழைப்பு விடுத்ததில் 110 மாணவிகள் ரூ.3000-ம் செலுத்தி டெல்லி சுற்றுலாவிற்கு பெயர் கொடுத்து பள்ளி நிர்வாகத்தை ஆச்சரியப்படுத்தினார்கள்.
      அதில் பூங்கொடி என்ற மாணவி திருப்பூர் அருகில் உள்ள இடுவம்பாளையம் கிராமத்தில் இருந்து வருகிறார். ஏழ்மையான குடும்பம். இந்த மாணவிக்கு அவருடைய அம்மா, தனது காது கடுக்கண்களை அடமானம் வைத்து பணம் செலுத்தியதை கேள்விப்பட்டு, அவரை அழைத்து பணத்தை திருப்பிக்கொடுக்க முயன்றபோது, அந்த தாய்.. சார் நான் இந்த  நகையை காதில் போடுவதை விட  எனது மகள் ஜனாதிபதி மாளிகையில் அவரை சந்தித்தாலே போதும்.. எனது மகளின் கனவே அதுதான்.. நான் எனது மகளின் கனவை நிறைவேற்றத்தான்  நகையை அடமானம் வைத்துள்ளேன். எனது மகளை டெல்லி கூட்டி சென்று அவரை காணவையுங்கள் என்று கண்ணீர்மல்க கூறியதைக்கேட்ட போதுதான் மாணவிகள் மட்டுமல்ல படிக்காத தாய்மார்கள் கூட அவர்மீது எப்படி அன்பு வைத்துள்ளனர் என்பதைக்காணமுடிந்தது. ஜனாதிபதி அவர்களுக்கு ஜெய்வாபாய் பள்ளியில் இருந்து 110 மாணவிகள்,13 ஆசிரிய ஆசிரியைகள் செப்டம்பர் மாதம் 26-,27,28-ம் தேதிகளில் டெல்லிக்கு கல்விச்சுற்றுலா வரும்போது, தங்களைக்காணவேண்டும் என்று செப்டம்பர் மாத துவக்கத்தில் கடிதம் எழுதியிருந்தோம். டெல்லியில் அவரைக்காண்பதற்கு பிரத்தியேகமாக அவருடைய புகைப்படத்தை பனியனில் பிரிண்ட்செய்து அவருக்குப்பிடித்தமான திருக்குறளையும் அதில் அச்சடித்திருந்தோம். அவருக்கு பள்ளியின் சார்பாக தருவதற்கு 6000-ம் மாணவிகளின் மத்தியில் அவருடைய புகைப்படத்தை வைத்து அதற்கு செயற்கை கற்களைக்கொண்டு அலங்காரம் செய்து, பிரேம் போட்டும், அவரைப்பற்றிய கவிதையையும் கொண்டுசெல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
          டெல்லியில் எங்களது சுற்றுலாவின் கடைசி நாளான 28-9-2005 அன்று மதியம் வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து எந்த செய்தியும் வராத காரணத்தால் மாணவிகள் சோகமாக இருந்தனர்.  சுமார் இரண்டுமணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து எங்களுக்கு மாலை 4 மணிக்கு மாணவிகளை ஜனாதிபதி அவர்கள் சந்திப்பதாக செய்தி வந்தது. மாணவிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சுமார் மாலை மூன்று மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் 11-ம் எண் நுழைவாயில் வழியாக அந்த பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகைக்குள் இரண்டு பேருந்துகளில் சென்றடைந்தோம்.  ஜனாதிபதி மாளிகையின் விருந்தினர் வரவேற்பு அறையில் உள்ளே சென்றவுடன் அந்த அறையில் இருந்த சித்திரங்களும், அலங்கார விளக்குகளையும் கண்டு மாணவிகள் ஜனாதிபதி மாளிகைக்குள்தான் இருக்கிறோமா இல்ல கனவா என ஒரு சிலர் நினைத்து தங்களை கிள்ளிப்பார்த்துக்கொண்டனர். வரவேற்பு அறையில் இசைக்கலைஞர்கள் மெல்லிய இசையை இசைத்து எங்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். முதலில் எங்களை சிற்றுண்டி அருந்தவைத்தனர். பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில்  110மாணவிகளும் 13 ஆசிரியைகளும் அமரவைக்கப்பட்டனர்.

         ஜனாதிபதி அவர்களை அறைக்குள் வரவேற்க  அறையின் வாசலில் நானும், வயதில் சிறிய கவிதா என்ற மாணவியும் நிறுத்திவைக்கப்பட்டோம். சரியாக 4 மணிக்கு  நாங்கள் இருந்த அறைக்குள் வந்தார். நாங்கள் வரவேற்றோம். தமிழகத்தில் இருந்து வந்துள்ள 110 நகராட்சிப்பள்ளி மாணவிகளைக்கண்டவுடன் அவர் முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. மாணவிகளிடம் சென்றவர் அனைவரையும் பார்த்து சிற்றுண்டி சாப்பிட்டீர்களா என்றார்! சாப்பிட்டோம் என மாணவிகள் கூறினர் என்ன சாப்பிட்டீர்கள் என்றார்..மாணவிகள் எங்களுக்குஜிலேபியும்இட்லி,வடையுடன் விருந்து கொடுத்துள்ளீர்கள் எனக்கூறியவுடன் தான் நம்பினார் போலத்தெரிந்தது.  முக்கால் மணி நேரம் மாணவிகளுடன் அறிவியல் பற்றியும்,  நமது குறிக்கோளையடைய ஏன் கனவு காணவேண்டும் என்பது பற்றி  உரையாடினார்கேள்விகள் கேட்பார்.. ஒரு மாணவியைப்பார்த்து நீ சொல் என்பார்.. இப்படி கேள்விகள் கேட்டு மாணவிகளின் அறிவுத்திறன் எப்படி இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டார். கடைசியாக அவர்  மாணவிகளிடம்
 ”, நீங்கள் திருப்பூரில் இருந்து வந்துள்ளீர்கள்.. வேலை தேடுபவர்களாக இருக்காதீர்கள்வேலை தருபவர்களாக மாறுங்கள் ” என்ற சொற்கள்
      இன்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறதுபின் ஆசிரியைகளுடன் தனியாக புகைப்படம் எடுக்கலாம் எனக்கூறி தோட்டத்தில் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைவிட நாங்கள் அவரை சந்தித்தையும், கவிதை வாசித்ததையும் நினைவு கூர்ந்து தலைமை ஆசிரியைக்கு கடிதம் எழுதி நன்றி கூறியது வியப்பிற்குரியது.. இந்தியாவின் முதல் குடிமகன் ஒரு பள்ளியின் தலைமையாசிரியைக்கு கடிதம் எழுதியது சரித்திர பொக்கிசமாகும்.
    
   அப்துல் கலாம் அவர்களின் தன்னம்பிக்கை உரையான கனவு கானுங்கள் தன்னம்பிக்கைதான் எங்களுக்கு உற்சாகமூட்டி வழி நடத்தும்பாதையாக இருக்கிறது. 2003-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியில் ஆடிட்டோரியம் இல்லாத காரணத்தால் அவர் எங்கள் பள்ளிக்கு வரமுடியாத சூல் நிலைமை ஏற்பட்டது.அன்றில் இருந்து ஆடிட்டோரியம் கட்ட கண்ட கனவை 2010-ல் நிறைவேற்றியுள்ளோம். இதைத்தகர்க்கும் விதமாக தற்போது 7000-ம் மாணவிகள் அமரக்கூடிய பிரம்மாண்டமான கலையரங்கத்தை கட்டியுள்ளோம்.. அது போலவே இப்பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தில் ஆக்கிரமித்து இருந்த தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியினரை வெளியேற்றி சுப்ரீம் கோர்ட்வரை சென்று பள்ளி இடத்தை 15-5-2015-ல் மீட்டுள்ளோம்.
      எங்களின் ஆதர்ச கனவு நாயகருக்கு 2005 -ம் ஆண்டில் இருந்து அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதியை மாணவர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதியரசு இவரின் பிறந்த தினத்தை உலக மாணவர் தினமாக கொண்டாட ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் மாணவிகள் சார்பான வேண்டுகோளாகும்.
.ஜெய்வாபாய்ஈசுவரன். திருப்பூர் 15-10-2017.

-- Tuesday, September 12, 2017

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..


இது கல்வித் தாஜ்மஹால்.......

முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மீது

கொண்ட அன்பின் காரணமாக கட்டிய உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றித்தெரியும்!
இது என்ன கல்வித்தாஜ்மஹால் ! எங்கே இருக்கிறது? என அறிய ஆவலாக உள்ளதா?


                   1992-ம் ஆண்டு திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் 50 ஆவது பொன்விழா கொண்டாட பள்ளி நிர்வாகமும், பெற்றோர்-ஆசிரியர் கழகமும் முடிவு செய்தன. அன்றைய தலைமையாசிரியை பிரேமா டேனியலும், நானும் இப்பள்ளியை உருவாக்கிய ஆஷர் குடும்பத்தை அழைப்பது என முடிவெடுத்து வாரிசுகளின் விபரங்களை தேட ஆரம்பித்தோம்..அப்போதுதான் மூத்தமகன் பிரதாப் ஆஷரின் மகன் மோகன் ஆஷர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தேவ்ஜி காலனியில் ஜெய்வாபாய் பள்ளியின் ஸ்தாபகரின் மனைவியான(பாட்டி) சாந்திபாயுடன் வசிப்பதையறிந்து அங்கு சென்றோம். அங்கு சென்ற பின் தான் எங்களுக்கு ஜெய்வாபாய் அவர்களின் இளையமகன் கிருஷ்ணகுமார் ஆஷர் பெங்களூரில் இருப்பதை அறிந்தோம்.. தலைமையாசிரியை பிரேமா டேனியல் அவர்கள் பெங்களூர் சென்று பள்ளியின் பொன்விழாவிற்கு தலைமை தாங்க அழைத்துவந்தார்.
       அதன் பிறகு தான் எங்களுக்கே இந்தப்பள்ளியின் வரலாற்றுக்குப்பின்னே இப்படியொரு நிகழ்வு இருப்பதை அறிய முடிந்தது.
  
 திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மகால் என்ற அடைமொழிப்பெயரை,1998-ல் பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல சாகித்திய அகதாமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைக்கேள்விப்பட்டு, கல்வித்தாஜ்மஹால் என்று வர்ணித்தார். இந்தியாவிலேயே ஒரு அரசு/ நகராட்சிப்பள்ளிகளில் ஒரே வளாகத்தில் மிக அதிகமான 7300 மாணவிகள் கல்வி கற்கும் பெண்கள் பள்ளி இதுவாகத்தான் இருக்கும்!...ஜெய்வாபாய் பள்ளியின் வரலாறு உங்கள் முன்னே!..

                                                                   


திரு.தேவிஜி ஓ ஆஷர் &  திருமதி ஜெய்வாபாய் தேவ்ஜி ஆஷர்

குஜராத் மாநிலம் ஜாம்  நகரைச்சேர்ந்த திரு.டி..ஆஷர் தனது 13 வயதில் பம்பாயில் உள்ள  மூல்ஜி ஜெட்டா என்ற பிரபல பஞ்சு வியாபாரியிடம் வேலைக்குச்சேர்கிறார்.  பின் அவர் 12-12-1907-ம் ஆண்டு  தனது முதலாளியால் திருப்பூரில் உள்ள அவருடைய  ஜின்னிங்பேக்டரிக்கு(தற்போது திருப்பூர் நகராட்சிக்கு எதிரில் உள்ள இடத்தில்) பருத்திகள் வாங்குவதற்கும்,வாங்கிய பருத்தியை மும்பைக்கு அனுப்பவும், கணக்கெழுவும்  அனுப்பபடுகிறார்.திருப்பூர் வந்த ஆஷர் நகராட்சிக்கு எதிரில் உள்ள ஜின்னிங்பேக்டரியில் தனது வேலையைத்தொடங்குகிறார். சில வருடங்கள் கழித்து தனியாக பஞ்சு வியாபாரம் செய்கிறார். ஓரளவு  சொந்தக்காலில் நிற்கும் துணிவு வந்தவுடன், தனது இல்வாழ்க்கைத்துணைவியாக ஆலப்புழாவைச்சேர்ந்த ஜெய்வாபாய் என்பவரைக்கைபிடிக்கிறார். முதலில் கோர்ட் வீதியில் (தற்போது கோல்டு பிளஸ் நகைக்கடை அருகில்) வாடகை வீட்டில் தனது திருமண வாழ்க்கையைத்தொடங்குகிறார். பின் தனது கடும் உழைப்பினால் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பன்சிலால் காலனியை விலைக்கு வாங்கி(சுமார் 25 ஏக்கரில் இருந்தது) சொந்த வீடு கட்டி குடி போகிறார்.. வீட்டைச்சுற்றி இயற்கையான முறையில் மரம், செடி, கொடி என இயற்கைச்சூழலில் இந்த வீடு இருப்பதை இன்றும் காணலாம்.  


இவர்களுடைய இல்வாழ்க்கையில்   முதல் மகனாக பிரதாப், இரண்டாவதாக கிருஷ்ணகுமார், மூன்றாவதாக சாரதா என்ற மகளும் பிறக்கின்றனர். 1930-ம் ஆண்டுகளில்  மகாத்மா காந்தியின் தலைமையில் சுதந்திரப்போராட்டம் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சுதந்திரப்போராட்டத்தின் போது சில முறை திருப்பூருக்கும் வருகை புரிந்து, தனது அகிம்சைப்போராட்டத்திற்கு மக்கள் ஆதரவைத்திரட்டியுள்ளார்.  ஜெய்வாபாயும் காந்தியின் கொள்கையால்  குறிப்பாக பெண்கல்வி பெருக வேண்டும் என்று கூறி வந்த மகாத்மாவின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார்.   1936-ம் ஆண்டு  கடைசியில் நான்காவதாக புஷ்பா என்ற மகள் பிறந்த சமயம் ஜெய்வாபாய் காச நோய்க்கு ஆளாகிறார். அந்தக்காலத்தில் காச நோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும்... பெருந்துரையில் உள்ள  காச நோய் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளிக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள் தங்குவதற்கு வார்டுகள் போதுமான  அளவு இல்லாமல் இருப்பதைக்கண்டு, ஒரு வார்டு கூட கட்டித்தருகிறார்.. அந்தக்காலத்தில் காச நோய் பீடிக்கப்பட்டவர்கள் இருமிக்கொண்டே இருப்பார்கள்.. இது ஒரு தொற்று நோயாகும்.. குழந்தைகளுக்கு விரைவாக பற்றிக்கொள்ளும்.. கடைசி குழந்தை புஷ்பா கைக்குழந்தையாக இருக்கிறது.. நோய்ப்பாதிப்பிற்கு ஆளான மனைவி, 4 குழந்தைகள் என்ன செய்வது என ஆஷர் திகைக்கிறார்.  இந்த இக்கட்டான நேரத்தில்  ஜெய்வாபாய்  தனது ஒன்றுவிட்ட  தங்கை முறையாகும் சாந்திபாயை அழைத்து  உதவிக்கு வைத்துக்கொள்கிறார்..தான் ஒரு வேளை இறந்துவிட்டால்  தனது  குழந்தைகளைக்காக  தனது கணவரை   திருமணம் செய்து கொள்ள வேண்டும்  என வேண்டுகிறார்... தனது அக்காவின் வேண்டுகோளை  சாந்திபாய்  ஏற்றுக்கொள்கிறார்..

.
               1937-ம் ஆண்டு   குழந்தை புஸ்பாவிற்கு ஆறு மாதம்தான் ஆகிறது.  ஜெய்வாபாய்க்கு காச நோய் கடுமையாகி விட்டது.  தான் இனி  நீண்ட நாட்கள் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்கிறார்.. தனது கணவரை வரச்சொல்கிறார்.  ஆஷர் வீட்டினுள் சென்று தனது அன்பு மனைவியிடம் உனக்கு ஒன்றும் ஆகாது,கவலைப்படாதே!! என்று கூறி அருகில் அமர்ந்து மனைவியின் கைகளைப்பற்றி ஆறுதல் கூறுகிறார். ஜெய்வாபாய் தனது கணவரின் கண்களைப்பார்த்து எனக்கொரு நீண்ட நாளாக ஒரு ஆசை இருக்கிறது! அதை நீங்கள் நிறைவேற்றுவீர்களா? எனக்கேட்கிறார். உனது ஆசை என்ன சொல்! என்கிறார். திருப்பூரில் பெண்குழ ந்தைகள் ஐந்தாம்(5)ஆம் வகுப்பிற்குமேல் படிப்பதற்கு உயர் நிலைப்பள்ளி இல்லை! நீங்கள் பெண்களுக்கென்று ஒருஉயர் நிலைப்பள்ளி கட்டவேண்டும். இது எனது கடைசி ஆசை எனக்கூறி, ஆஷரின் கைகளை இருகப்பற்றுகிறார்... பற்றிய கை சிறிது நேரத்தில் துவண்டு கீழே விழுகிறது! 1904-ல் ஆலப்புலாவில் பிறந்த ஜெய்வாபாய் ,1937-ல் திருப்பூரில் திருமதி ஜெய்வாபாய் தேவ்ஜி ஆஷராக  நான்கு குழந்தைகளை தனது கணவரிடம் ஒப்படைத்துவிட்டு முப்பத்தி மூன்று வயதில் மறைகிறார். நான்கு குழந்தைகளுடன் ஆஷர் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்குகிறார்..


காலம் முழுவதும் தன் ஆருயிர் மனைவி ஜெய்வாபாய் தன்னுடன் இருப்பார் என்றிருந்த ஆஷருக்கு இப்படி பாதியிலேயே தன்னையும்  நான்கு குழ ந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு,வானுலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. தனது ஆருயிர் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்...அதே சமயம்  நான்கு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். பாவம் ஆஷர்...என்ன செய்வது என துயரத்தில் இருக்கும் போது போது ,  ஜெய்வாபாயின் ஒன்றுவிட்ட சகோதரி சாந்திபாய்     தனது அக்காவின்  கணவரை  திருமணம் செய்து கொள்ள முன்வருகிறார். ..தனது அக்காவின் கணவரைக்கைபிடிக்கிறார்..! அப்போது  திருமதி சாந்திபாய் ஒரு முடிவினை தனது கணவிரிடம் தெரிவிக்கிறார். நமக்
கொரு குழந்தை பிறந்தால்  ஒரு வேளை  அக்காவின்  
 குழ ந்தைகளைக் கவனிக்கமுடியாமல் போய்விடலாம்.. எனவே  எனக்கு குழந்தையே வேண்டாம் என்று ஆஷரிடம் கூறி, அதன் படியே வாழ்கிறார்.

திரு.டி.. ஆஷர் &; திருமதி.சாந்திபாயுடன்  மகன்கள் பிரதாப், கிருஷ்ணகுமார், சாரதா, புஷ்பா..
திருமதி சாந்திபாய் ஆஷர் தந்த ஒத்துழைப்பின் காரணமாக வியாபாரத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்ட தேவ்ஜி ஆஷர் 1942-ல் திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் பெண்களுக்கென்று தனியாக நகராட்சியின் ஆதரவுடன் 6-ம் வகுப்பை துவக்குகிறார். உயர் நிலைப்பள்ளிக்கான இடத்தைத்தேடுகிறார். திருப்பூரில் ராயபுரம் பகுதியில் நஞ்சப்பா ஆண்கள் உயர் நிலைப்பள்ளி 1932-ல் இருந்து செயல்பட்டுவருகிறது. இந்தபள்ளியை ஒட்டி ராயபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பள்ளிக்காக ஒதுக்கினால் அந்த இடத்தில் பெண்கள்பள்ளி கட்டி நகராட்சிக்கு ஒப்படைப்பதாக அன்றைய ஆங்கில அரசிடம் கோரிக்கைவைக்கிறார். இதற்காக ஆங்கிலேய மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சென்று பார்க்கிறார். ஆங்கிலேய கலெக்டருக்கு ஒரே வியப்பு! குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரைச்சேர்ந்த இந்த வட நாட்டு சேட்டு, தனது மா நிலத்தில் பள்ளியைக்கட்டாமல் பிழைக்க வந்த இடத்தில் சொந்தக்காசில் பள்ளியைக்கட்டி நகராட்சிக்குத் தானமாகத்தருகிறேன் என்கிறாரே என வியக்கிறார்! தனது வியப்பை கேட்டும் விடுகிறார்.அதற்கு ஆஷர் கீழ்கண்டவாறு கூறினாராம்!

துரை அவர்களே! நான் இந்த திருப்பூருக்கு எனது பம்பாய் முதலாளிக்கு பஞ்சு வாங்கி அனுப்ப வும் கணக்கெழுதவும் வந்தேன். என்னுடைய உழைப்பினால் இன்று திருப்பூரில் ஓரளவு செல்வம் சேர்த்துள்ளேன். இந்தச்செல்வம் திருப்பூர் மக்களுக்குத்தான் பயன்படவேண்டுமேயொழிய எனது மா நிலமான குஜராத்திற்கல்லஎனக்கூறி, தனது மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற உதவிடக்கூறுகிறார். ஆஷரின் உறுதியைக்கண்ட கோவை கலெக்டர் சென்னை மாகாண அரசிற்கு பரிந்துரை செய்து ,தற்போது பள்ளியமை ந்துள்ள 7.1/2 ஏக்கர் இடத்தை 1948-ல் அரசு ஆணை எண்: 1425 நாள் - 17-6- 1948 ல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்.


30-11-1948-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண கல்வியமைச்சராக இரு ந்த மாண்புமிகு T.S.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால்( கோவையில்அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்)பள்ளிக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. 14-10-1951 அன்று அன்றைய சென்னை மாகாண கல்வி மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு கே.மாதவமேனன் அவர்களால், திருப்பூரின் நகரத்த ந்தை என்று அழைக்கப்படுகிற திரு.கே.என்.பழனிச்சாமிக்கவுண்டர்,நகர்மன்றத்தலைவர் தலைமையில், ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் முதல் மாடியுடன் கூடிய 18வகுப்பறைகளும் திரு.டி..ஆஷர்,அவருடைய மகன்கள் திரு.பிரதாப் ஆஷர், திரு.கிருஷ்ணகுமார் ஆஷர் மற்றும் மகள் கள் சாரதா, புஷ்பா அவர்கள் முன்னிலையில்,திருப்பூர் மக்களின் பெண்கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டு, திருப்பூர் நகராட்சிக்குத் தானமாக வழங்கப்படுகிறது

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த சமூகத்தில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது..தேசப்பிதாவின் கூற்றான,ஒரு ஆணுக்குத்தரப்படும் கல்வி அவனுக்கு மட்டுமே பயன்படும்.ஆனால ஒரு பெண்ணிற்குத்தரப்படும் கல்வி ஒரு குடும்பத்திற்கே பயன்படும் என்பது திருப்பூரில் நடைமுறைக்கு ந்தது. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! எட்டும் அறிவினில் ஆணிற்கிங்கே இளைப்பில்லை காண் ! என்ற மாககவி பாரதியின் கனவை நிறைவேற்றும் வகையில் பெண்கள் கல்வி கற்க ,ஜெய்வாபாய் பள்ளியை நாடிவரத்துவங்கினர். பெண்கல்வியில் புதிய சகாப்தம் ஏற்பட்டது.ஜெய்வாபாயின்  பெண்கல்விக்கனவை அவருடைய கணவர் திரு.தேவ்ஜி ஆஷர் நிறைவேற்றினார்.

 இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக திருமதி விசுவாசம் அவர்கள் (1.07.1942 முதல் 31-5-1967)பொறுப்பேற்று 25 ஆண்டுகள் இப்பள்ளியை திறம்பட நடத்தியுள்ளார். அவருக்குப்பின்  திருமதி ஜே.எஃப் பரமானந்தம் 01-06-1967 முதல் 31-05-1977 வரை, மூன்றாவதாக திருமதி,எல்.எஸ். நாமகிரி 01-06-1977 முதல் 30-9-1978 வரை, நான்காவதாக திருமதி.லில்லி லாசரஸ் 01-10-1978 முதல் 31-5-1983 வரை, ஐந்தாவதாக செல்வி.ஜி.சாவித்திரி 01-06-1983 முதல்31-5-1991 வரை, ஆறாவதாக திருமதி.பிரேமா டேனியல் 01-06-1991 முதல் 31-5-1995 வரை, ஏழாவதாக திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம் 01-06-1995 முதல் 31-05-2006 வரை(தேசிய நல்லாசிரியர் விருது),எட்டாவதாக  திருமதி..விஜயா ஆனந்தம் 01-07-2006 முதல் 31-01-2013 வரை(தேசிய நல்லாசிரியர் விருது)யிலும் தலைமையாசிரியர்களாக பணியாற்றியுள்ளனர். தற்போது ஒன்பதாவது தலைமையாசிரியராக திரு..போஜன் அவர்கள் 03-06-2013 முதல் பணியாற்றி வருகிறார்.

1989-90 ம் ஆண்டு இப்பள்ளியின்  பெற்றோர்-ஆசிரியர் கழகம் புனரமைக்கப்பட்டது.. 1989-ல் மாணவியர் எண்ணிக்கை 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 3000-ம் ஆகும். 2009-2010-ம் ஆண்டில் இது 7285...என்ன 7285 ஆஆஆ... என வியக்குகிறீர்களா.. இந்தியாவிலேயே மாபெரும்  நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியாக , பெண்கல்விக்கு மகுடம் சூட்டிய பள்ளியாக விளங்குகிறது.. இது மட்டுமே  சாதனையா... இல்லை.. நிறைய இருக்கிறது... தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாட்டில் 1995 முதல் 2005 வரை தொடர்ந்து 10 முறை, தேசியளவில் விருது பெற்ற பள்ளி, மூன்று முறை இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில்,(2001 , 2003, 2006) ஆய்வுக்கட்டுரைகளை இப்பள்ளி மாணவிகள் சமர்ப்பித்து பங்கேற்றுள்ளனர்.. இப்பள்ளி மாணவிகளை மேன்மைமிகு ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்  அவர்கள் முதல் தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதா(அம்மா) அவர்கள் வரையிலும் பாராட்டைப்பெற்ற பள்ளியாகும்.. அடுத்தடுத்து இரண்டு தலைமையாசிரியைகள்  திருமதி.ஆர். ஜரீன்பானு பேகம் 2003, திருமதி.ஆ.விஜயா ஆனந்தம் 2007 தேசிய விருது பெற்றதும் இப்பள்ளியின் சாதனைக்குச்சான்றாகும்... இது மட்டுமா பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக மிகச்சிறப்பான கணணிக்கல்வியை இப்பள்ளியில் அமுல்படுத்தியதற்காக 2004-ம் ஆண்டில் கம்யூட்டர் எக்ஸ்லென்சி அவார்டு( விருது மற்றும் ரூ. ஒன்றரை லட்சம்) விருதை மேன்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து  தமிழகத்தில் இருந்து தேசிய அளவில் பெற்ற பள்ளியாகும்.. இப்படி அடுக்கிக்கொண்டே.. போகலாம்..  ஒரு சாதாரண  நகராட்சிப்பள்ளி இந்தியளவில் சாதனைப்பள்ளியாக மாறிய து எப்படி...?வரலாறு தொடரும்...  ஜெய்வாபாயின்  குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக சாந்திபாய் தனக்கென குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.ஜெய்வாபாயின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல வளர்த்துவந்தார். ஜெய்வாபாய் இறக்கும் போது மூத்த  புதல்வி சாரதாவிற்கு 4 வயது.  சாரதா ஜெய்வாபாய் பள்ளியில் 9 -ம் வகுப்பு  படிக்கும்போதே, பம்பாயில் உள்ள நரேந்திர சம்பத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஜெவலாந்த் என்ற மகன் பிறந்தான்,.. குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்போது, சாராதாவின் கணவர் எதிர்பாரத விதமாக இறந்துவிடுகிறார். சாரதா தனது குழந்தையுடன்  கைம்பெண்ணாக 15 வயதில் மீண்டும்திருப்பூருக்கே அப்பாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்...
            பெண்குழந்தைகள் படிக்கவேண்டும் என்ற  தனது அம்மாவின் கனவை நிறைவேற்ற சாரதா உறுதி ஏற்கிறார்.   மீண்டும் ஜெய்வாபாய் பள்ளியில் சேர்ந்து அன்றைய 11-ம் வகுப்பை முடிக்கிறார். இது அந்தக்காலத்தில் மிகவும் புரட்சிகரமான முடிவாகும்.. ஒரு குழந்தைக்குத்தாயான கைம்பெண் பள்ளியில் சேர்ந்து படிப்பது என்பது கனவில் கூட நினைத்துப்பார்க்காத செய்தியாகும்.  பின் சென்னை சென்று கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெறுகிறார். அன்று சென்னையில் அறிமுகமாகியிருந்த குழந்தைகளுக்கான மாண்டிசோரி கல்வியைக்கற்று திருப்பூருக்கு வருகிறார். மாண்டிசோரி கல்வியைக்கற்றதன் காரணமாக ஜெய்வாபாய் பள்ளி வளாகத்திலேயே ஒரு இடத்தில் ஆசிரியைகள் உட்பட ராயபுரம் பகுதியில் இருந்த   மூன்று வயதிற்கு மேற்பட்ட  குழந்தைகளுக்கு  மாண்டிசோரி முறையில் ஜெய்வாபாய் பள்ளியின் தென் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் தற்காலிக வகுப்பறையில் கல்வியை  கற்றுத்தருகிறார்.
         இந்தப்பள்ளிக்கு ஆஷருடைய தேவ்ஜி காலனி வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட், பால், பழம் உட்பட தினமும் வழங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு கால கட்டத்தில் சாரதா தனது மகனின் படிப்பினை முன்னிட்டு மணிபால் சென்றுவிடுகிறார். இதன் பின் தான் திருப்பூர் ரோட்டரி கிளப்பினர் இந்த மாண்டிசோரி பள்ளியினை நடத்துகிறோம் என்று கூறி பள்ளிக்குள் வருகின்றனர். படிப்படியாக  ஒரு ஏக்கர் இடத்தினை ஆக்கிரமித்து மெட்ரிகுலேசன் பள்ளியை நடத்துகின்றனர். 1996-ம் ஆண்டு ஜெய்வாபாய் பள்ளியின் பெ.ஆ.கழகம் தொடர்ந்த வழக்கால், ஜெய்வாபாய் பள்ளியின் இடம் தற்போது 24-8-2017 அன்று பள்ளிவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
          தனது மனைவி ஜெய்வாபாயின் வேண்டுகோளை ஏற்று பள்ளியை கட்டி நகராட்சிக்கு வழங்கிய திரு.தேவ்ஜி ஆஷர் ஜூன் மாதம் 1968-ல் தனது 78-ம் வயதில் மறைந்தார்.   ஜெய்வாபாயின் குழந்தைகளுக்காகவே வாழ்ந்த  சாந்திபாய் ஆஷர்  09-11-2004-ல் மறைந்தார்..  ஜெய்வாபாயின் இரண்டு மகன்களும் காலமாகிவிட்டனர். பெரிய மகன் பிரதாப் அவர்களின் வாரிசுகள் தற்போது திருப்பூர், மும்பை, கோவை என வாழ்கிறார்கள்.. சிறிய மகன் கிருஸ்ணகுமார் அவர்களின் வாரிசுகள் பெங்களூருவில் வசிக்கின்றார்கள்..

      பெரிய மகள் சாரதா.. தனது ஒரு மகன்(ஜெவலாந்த் மருமகள் பேரக்குழந்தைகளுடன் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.. இளைய மகள் புஷ்பா  தனது இரண்டு மகன்களுடன் பேரன் பேத்திகளுடன்  செகந்திராபாத்தில் வசிக்கிறார்.  2003- ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து திருப்பூர் வந்த சாரதா அவர்கள் பள்ளிக்கு திடீரென்று வருகை புரிந்தார்.. அவரின் அம்மா அப்பா இருவரின் புகைப்படங்களைப்பார்த்தவர் கண்கலங்கி புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் எனக்கூறி  சென்றுவிட்டார். அவரின் இளைய மகள் திருமதி புஸ்பா அவர்கள் 2013-ம் ஆண்டில் பள்ளிக்கு வருகை புரிந்து அவரின் அம்மா-அப்பா இருவருக்கும் அஞ்சலி செலுத்தினார்.


(சமீபத்தில் ஹைதராபாத்திற்கு தனது மகனுடன் வந்திருந்த சாரதா அவர்கள்..(புளூ கலர் சார் சாரதா, புரவுன் கலர் சாரி திருமதி புஷ்பா)

     இப்போது ஜெய்வாபாயின் பெரியமகள் சாரதாவிற்கு 91 வயதும், சிறிய மகள் புஸ்பா அவர்களுக்கு 87 வயதும் ஆகிறது.  சென்ற ஆகஸ்ட் 2017-ல் ஹைதராபத்திற்கு அமெரிக்காவில் இருந்து திருமதி சாரதா அவர்கள் வருகை புரிந்தார்.. அப்போது குடும்ப வாரிசுகள் எல்லாம் ஒன்று கூடினார்கள். அதன் போட்டோதான் கீழே இருப்பது.


இடமிருந்து வலமாக:திரு.விக்ரம்(புஷ்பா அவர்களின் மகன்) திரு.உதய், திருமதி. மீரா,திருமதி சாரதா, திருமதி.புஷ்பா, டாக்டர் ஜூலி(சாரதாவின் மகன்) திரு.மோகன் பி ஆஷர்(திருப்பூர்)

     எழுபத்தி ஒன்பது (1938-ல்)   ஆண்டுகளுக்கு முன்பு உயிர் நீத்த ஜெய்வாபாய் அவர்களின் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற  கனவு நிஜமாகி இதுவரை ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று தொழில் அதிபர்களாக, மத்திய மா நில அரசுகளில் நிர்வாக அதிகாரிகளாக,  ஆசிரியைகளாக, உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதி நிதிகளாக, இல்லத்தரசிகளாக கோலோச்சி வருகின்றனர்.

 

ராணி ரூபா தேவி.. RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH.                ராணி ரூபா  தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெய...